கோவையில் மருத்துவக்கல்லூரி மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் பவபூரணி கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு முதுநிலை மயக்கவியல் மருத்துவப் படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் சேர்ந்து மூன்று மாதங்களேயான நிலையில் கல்லூரி விடுதியின் கழிப்பறையில் மர்மமான முறையில் பவபூரணி இறந்து கிடந்தார். இந்த மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டுக்காக மாணவி கொல்லப்பட்டாரா என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பியிருந்தது. பவபூரணி மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் இடதுசாரி மாணவர் அமைப்பினர் நேற்று (ஜூலை 8) மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் பவபூரணி மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ரவி வர்மன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கோவை ஆட்சியர், கோவை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மற்றும் இழப்பீட்டுத் தொகை விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.