தமிழ்நாடு முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப்- 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இத்தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசுப்பணியிடங்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. 10-ம் வகுப்பு தகுதி உள்ளவர்கள் எழுதக்கூடிய இத்தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மே மாதம் 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது. இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.
இந்த தேர்வு எழுத நுழைவுச்சீட்டு, கருமை நிறப் பேனா, ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு வளாகத்திற்குள் காலை 9 மணிக்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.