பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கூறினார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது இன்று காலை ரயில் பயங்கரமாக மோதியது. இதில் பள்ளி வாகனம் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பலியாகினர். மேலும் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூடப்படாமல் இருந்த கேட் பகுதியில் பள்ளி வேன் கடக்க முயன்ற போது ரயில் மோதி விபத்து நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. விபத்து ஏற்பட்ட போது, கீட் கேப்பர் உறங்கி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்திற்கு கேட் கீப்பர்தான் காரணம் என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். அவர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என் கூறினார்.