கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கு கல்வித்துறை சார்பில் நேரட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடலூரில் உள்ள தனியார் பள்ளி வேன் நேற்று காலை தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) வேனை ஓட்டிச் சென்றார். செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது, விழுப்புரம்-மயிலாடு துறை பயணிகள் ரயில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேன் சுக்குநூறாக நொறுங்கி, 50 அடி வரை இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த கோர விபத்தில் தொண்டமாநத்தம் விஜயசந்திரகுமார் மகன் நிமிலேஷ் (12), சின்னகாட்டுசாகை திராவிடமணி மகள் சாருமதி(16) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சாருமதியின் தம்பி செழியன்( 15), நிமிலேஷின் அண்ணன் விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஓடிச் சென்று, மின்சாரம் பாய்ந்ததில் பாதிக்கப்பட்ட செம்மங்குப்பம் அண்ணாதுரை (47) ஆகியோரை அங்கிருந்தவர்கள்மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாருமதி, நிமிலேஷ் உடல்களை போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இதற்கிடையே, மேல்சிகிக்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட செழியன், அங்கு உயிரிழந்தார்.
கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் சி.வெ. கணேசன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்த மாணவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி என தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.