பாமகவில் உங்கள் மகள் காந்திமதிக்கு பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, போக போகத் தெரியும் என்று பாடலைப் பாடி டாக்டர் ராமதாஸ் பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் பாமக பொதுக்குழு ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து இன்று காலை கும்பகோணம் புறப்பட்டார். அப்போது பூம்புகாரில் நடைபெறும் மாநாட்டிற்கு டாக்டர் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு சிறிது நேரம் அமைதியாக இருந்த டாக்டர் ராமதாஸ், இதற்கான பதிலை பிறகு தெரிவிக்கிறேன் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாமக.செயற்குழுக் கூட்டத்தில் உங்களது மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார் . அது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. உங்கள் குடும்பத்தினர் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என நீங்கள் சொல்லி உள்ளீர்களே என்று வினா எழுப்பியதற்கு, ஏற்கெனவே எங்கள் குடும்பத்திலிருந்து அரசியலில் கலந்து உள்ளார்கள் என்று டாக்டர் ராமதாஸ் பதிலளித்தார்.
உங்கள் மகள் காந்திமதிக்கு பாமகவில் பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, போகப் போகத் தெரியும் என்று திரைப்படப் பாடலைப் பாடியபடி அங்கிருந்து டாக்டர் ராமதாஸ் சென்று விட்டார்.