Hot News :
For Advertisement Contact: 9360777771

5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகினர்.

© News Today Tamil

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில், அமைந்துள்ள தனியார் பள்ளியை ( புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, கோவில் நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என கடந்த 2024 ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம்,மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் தரப்பில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், புவனகிரி தாலுகா பெரியப்பட்டு கிராமத்தில் பள்ளிக்கு 4.73 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

32 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அந்த இடத்தில் சாலை வசதி ஏதுமில்லை என்றும், குவாரிகள் நடைபெறுகின்றன என்றும் பள்ளித்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடலூர் நகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் நிலம் ஒதுக்கி தர வேண்டுமென பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், பிரதான சாலையிலிருந்து குறிப்பிட்ட அந்த நிலத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையடுத்து, பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கக்கோரி அரசுக்கு விண்ணப்பிக்கும் படி பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதனை பரிசீலிக்கும்படி வருவாய்த்துறை செயலாளர் உத்தரவிட்டு, அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post பாமகவில் மகளுக்கு பொறுப்பு? - டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
Next Post சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.
Related Posts