டெல்லி சீலாம்பூரில் அடுக்குமாடி கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டெல்லியில் சீலாம்பூரில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள நான்கு மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் இருந்த நான்கு பேரை மீட்ட தீயணைப்புத்துறையினர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து நடந்த பகுதியில் 7 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.