அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மனு அனுப்பியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவில் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் அதிகாரப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பாமக தலைவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில்,, பாமகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கி இரு தரப்பினரும் நியமனம் செய்து வருவதால் அக்கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அன்புமணியை கட்சில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பாமகவின் செயற்குழுவில் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ராமதாஸ் பாமகவின் செயற்குழு கூட்டமே கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணானது என்று பாமகவின் அரசியல் தலைமைக்குழு, தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், 2026 ஜூன் 26-ம் தேதி வரை பாமக தலைவராக அன்புமணியே தொடருவார் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய பிறகு டாக்டர் ராமதாஸ் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மனுவில், ‘இதுவரை பாமகவின் தலைவராக இருந்த அன்புமணியின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டோம்..
பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் அன்புமணியை செயல் தலைவராக நியமித்து உள்ளேன். இதனால், பாமக தலைவர் பதவியை நானே ஏற்று உள்ளேன். புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறேன். இதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இதுவரை தலைவராக இருந்த அன்புமணியின் பதவி காலம் மே 28-ம் தேதியுடன் நிறைவு பெற்று விட்டது என்பதையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அவரது பதவி காலம் முடிந்த மறுநாளே என்ன பாமக நிர்வாகிகள் தலைவராக தேர்வு செய்து விட்டனர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவுடன் 1413 செயற்குழு உறுப்பினர்கள், 21 தலைமை நிர்வாக குழு உறுப்பினர்களின் புகைப்பட்டத்துடன் அவர்கள் கையெழுத்திட்ட ஒப்புதல் கடித்தத்தை ராமதாஸ் வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த மனுவை தேர்தல் ஆணையத்திடம் டாக்டர் ராமதாஸின் தனிச்செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் உள்ள சாமிநாதன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாமகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.