பெங்களூருவில் தெருநாய்களுக்கு நாள்தோறும் சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதுடன் அதற்காக நிதியையும் ஒதுக்கியுள்ளது.
இந்தியா முமுவதும் தீராத தொல்லையாக இருப்பது தெருநாய்கள் தான். சாலையோரம் கொட்டப்படும் உணவு, கோழிக்கழிவுகளைச் சாப்பிட்டு விட்டு சாலையில், வாகனங்களில் செல்வோரை தெருநாய்கள் கடித்து குதறுவது அன்றாட நடவடிக்கையாக உள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துள்ளனர்.
பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் 7 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளன. பெங்களூரு மாநகரில் 2 லட்சத்து 79 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. இந்த தெருநாய்களைக் கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
தெருநாய்களுக்கு போதுமான ஊட்டச்சத்துணவு கிடைக்காததால் அவை சாலையில் செல்வோரை கடிப்பதாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், கூறுகின்றனர். இதன் காரணமாக தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதாவது தெருநாய்களுக்கு 'சிக்கன் ரைஸ்', 'எக் ரைஸ்' என விதம் விதமான அசைவ உணவு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடியே 88 லட்சத்தை செலவிடவும் மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி சிறப்பு ஆணையாளர் சுரல்கர் விகாஸ் கூறுகையில், தெருநாய்கள் மனிதர்களைக் கடிக்காமல் இருப்பதற்காக கடந்த ஆண்டு பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சைவ உணவளிக்கும் திட்டத்தை தொடங்கியது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் உதவினர். ஆனாலும், இந்த திட்டம் போதிய பலனளிக்கவில்லை. எனவே தற்போது பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ் பாக்யா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 2.79 லட்சம் நாய்களுக்கு சத்தான உணவு வழங்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்கள் வீதம் இந்த அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது என்றார். பெங்களூரு மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தனி மனிதனுக்கு உணவு கிடைக்காத நிலையில் தெருநாய்களுக்கு தினமும் சிக்கன் ரைஸ், எக் ரைஸா என்ற கண்டனக்குரல்களும் எழுந்துள்ளன.