குஜராத்தில் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்த ஏர் இந்திய விமான விபத்துக்கு காரணம் என்பது குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்து குறித்து புலனாய்வு பணியகம் (ஏஏஐபி) விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழு விமான விபத்து குறித்து நடத்திய விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் 2 என்ஜின்களும் செயலிழந்ததாகவும், , 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. ஒரு விமானி, தனது சக விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நான் அந்த வால்வை அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் கூறியதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏர் இந்தியா விமானத்தின் 2 என்ஜின்களும் செயல் இழந்த நிலையில், ஆர்ஏடி என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது. அப்போது எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கி ஒரு என்ஜின் மட்டுமே ஓட தொடங்கியுள்ளது. இதனால் விமானம் மேல் செல்ல முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முழுவதுமாக சேதமடைய காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த முழுமையான அறிக்கை வெளிவர இன்னும் 6 மாதங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.