கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக் கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. பள்ளி வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பலியான இருவர் அக்கா, தம்பியாவார். மேலும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். ரயில் பள்ளி வேன் மீது மோதிய போது மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் அண்ணாதுரை என்பவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழு மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது வேகமாக வந்த ரயில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் நொறுங்கியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேட் கீப்பர் உறங்கியதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ரயில்வே துறையும், காவல்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த கோர விபத்து சம்பவம் செம்மங்குப்பம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.