தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 14-ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் சென்றுவிட்டார். தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நான்கு நாட்கள் நடைபெற்றது.
அதன்பிறகு, மார்ச் 14-ம் தேதி சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதனை தொடர்ந்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.
அதன் பின் மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " அக்டோபர் 14-ம் தேதி சட்டப்பேரவையில் காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும். முதல் நாளில் மறைவுற்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். வால்பாறை தொகுதி எம்எல்ஏ கந்தசாமி மறைவு குறித்தும், உயிரிழந்த பிரபலங்கள் குறித்தும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அத்துடன் அக்டோபர் 14-ம் தேதிக்கு முன்னதாக, ஏதாவது ஒரு தேதியில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு, சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும்" என்றார்.