சீன அரசு அதிகாரிகளை சந்தித்ததுடன், அமெரிக்க விமானப்படை ரகசிய ஆவணங்களை பதுக்கியதாக இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச்சேர்ந்தவர் ஆஷ்லே டெல்லிஸ்(64). இவர் வர்ஜீனியாவில் உள்ள வியன்னாவில் வசித்து வந்தார். அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஷ்லே டெல்லிஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரகசிய ஆவணங்கள் உட்பட தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாக வைத்து இருந்ததாக நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் உள்ள உறவுகள் குறித்த குரலாக போற்றப்படும் டெல்லிஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர்.
அத்துடன் , வெளியுறவுத்துறைக்கு ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பென்டகனின் நிகர மதிப்பீட்டு அலுவலகத்தின் ஒப்பந்ததாரராகவும், எஃப்பிஐ பிரமாணப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார். அத்துடன் வாஷிங்டன் சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் ஒரு மூத்த உறுப்பினராகவும் ஆஷ்லே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.