கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பான கரூர் போலீஸாரின் விசாரணைக்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த குழு கரூரில் தீவிர விசாரணையை மேற்கொண்டது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் இவ்வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை' என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் கருத்து தெரிவித்து, வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக்குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.