‘கோல்ட்ரிப்' மருந்து தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருமல் சாப்பிட்ட 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ‘கோல்ட்ரிப்' என்ற இருமல் மருந்தை சாப்பிட்டதால் இந்த குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிய வந்தது.
இந்த மருந்து தயாரிக்கும் ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது. 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநில தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனாநகர் 2-வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மத்தியப்பிரதேச தனிப்படை பாலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது.
மேலும், இந்த மருந்து கம்பெனியை முறையாக கண்காணிக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அண்ணா நகர், பல்லாவரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் சோதனை நடந்து வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.