அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் விழுந்ததில் இருவர் உடல் சிதறி பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், போர்ட் வொர்த் அலையன்ஸ் விமான நிலையத்தில் இருந்து டாரன் என்ற இடத்திற்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த விமானம் திடீரென சாலையை நோக்கி வேகமாக விழுந்தது.
இதில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்தவுடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விமானம் தரையில் விழுந்ததில் சாலையில் சென்ற இருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. பரபரப்பான சாலையில் விமானம் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.