கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தின் கோல்ட்வின்ஸ் பகுதியில் நேற்று நள்ளிரவு நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
கோவையில் அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஜி.டி. நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்து இறங்கும் இடத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்புறம் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து லாரிக்கு அடியில் அப்பளம் போல நொறுங்கியிருந்த காரை கஷ்டப்பட்டு மீட்டனர். அந்த காரில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். பாலம் திறந்து 5 நாட்களுக்குள் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.