மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன. 65 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் அருகே பசுபிக் கடலில் புயல் உருவாகியது. ‘ரேமண்ட்’ என்ற இந்த புயல் காரணமாக மெக்சிகோவில் உள்ள 32 மாகாணங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது.
குறிப்பாக குவாரடிரோ, ஹிடல்கோ, வெரகுரூஸ், சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளன. காசோன்ஸ் ஆற்றின் கரையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் கார்கள் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மெக்சிகோவில் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழை வெள்ளத்தில் மாயமான 65 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.