இந்தியாவில் ஏ.ஐ காரணமாக 20 லட்சம் ஐ.டி துறையினரின் வேலைவாய்ப்பு பறிபோகும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகம் முழுவதும் ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் 20 லட்சம் ஐ.டி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் கூறுகையில், " இந்தியாவில் ஐ.டி, துறையில் தற்போது 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், 20 லட்சம் பேரின் வேலை பறிபோகும்.
எனினும், பணிபுரிவோர் ஏ.ஐ., தொடர்பான படிப்புகளை கற்றுக் கொள்வதால், அடுத்த 5 ஆண்டுகளில், புதிதாக 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏ.ஐ is குறித்த பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பவர்களே வேலையை இழக்க நேரிடும்.
இது வெறும் 20 லட்சம் பேர் வேலையிழப்பு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. 3 கோடி பேரின் வருமானத்துடன் தொடர்புடையது ஆகும். எனவே, தனிநபர்கள் ஏ.ஐ தொடர்பான பயிற்சியில் இணைந்து, தங்கள் சூழலுக்கு ஏற்ப திறமையை தகவலமைத்து கொள்வது அவசியம்.
உலகில் அதிக எண்ணிக்கையிலான இளம் டிஜிட்டல் திறமையாளர்கள் இந்தியாவில் தான் உள்ளனர். ஏ.ஐ காரணமாக வரப்போகும் மாற்றங்களை சாதகமான வாய்ப்புகளாக மாற்ற, தேசிய ஏ.ஐ., திறமை இயக்கம் என்ற பெயரில் நாடு தழுவிய கூட்டு முயற்சியை தொடங்க வேண்டும். இந்தியாவை உலகிலேயே அதிக ஏ.ஐ நிபுணர்களை கொண்ட நாடாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்" என்றார்.