சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரமாக மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடுத்தார். அந்த மனு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார்.
கடந்த மார்ச் மாதம் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான், விஜயலட்சுமி ஆகிய இருதரப்பும் பேசி முடிவுக்கு வர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டும் என்று விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீமானை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், விஜயலட்சுமி சுமுகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அத்துடன் சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறு பேசியதற்காக உச்சநீதிமன்றத்தில் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். விஜயலட்சுமிக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாகவும் சீமான் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் நடிகை தரப்பிலும் மன்னிப்பு கோரப்பட்டது. சீமான் மற்றும் விஜயலட்சுமியின் பரஸ்பர மன்னிப்பை ஏற்று வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.