பொதுவெளியில் 6 பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழு சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவிற்கு எதிராக இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர். இந்த நிலையில்,
இந்த போரை நிறுத்த அமெரிக்கா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறி வருகின்றன. அத்துடன் தங்கள் வசம் இருந்த இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
அத்துடன் கொல்லப்பட்ட எஞ்சிய பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கும் பணியில் ஹமாஸ் ஈடுபட்டு வருகிறது. மேலும், இஸ்ரேல் படைகள் காஸாவில் இருந்து வெளியேறி வருவதால் மீண்டும் காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், காஸா முனையில் பொதுவெளியில் வைத்து 6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அதற்கு, தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக அவர்கள் மீது ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை பொதுவெளியில் 30.க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை ஹமாஸ் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.