அயோத்தியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதனால், அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து போலீஸாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்தனர். வீடு இடிந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வெடித்த மர்மப் பொருள் வெடிகுண்டா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.