தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு போலீஸ்காரர் ஒருவர் சிபிஆர்(இதய நுரையீரல் மீட்பு) செய்து உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள கங்காநகர் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் தௌலத்ராம். இவர் காவல்நிலையத்திற்கு போன் செய்துள்ளார். தனது மகன் விஷால் (20) தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டின் அறையை சாத்திக் கொண்டு பிடிவாதம் பிடிக்கிறார். உடனடியாக வந்து காப்பாற்றுங்கள் என்று கதறினார். உடனடியாக அவரது வீட்டிற்கு காவல் மீட்பு வாகனம் (பிஆர்வி) ஐந்து நிமிடங்களுக்குள் செல்கிறது. வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது விஷால் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக கயிறை அறுத்து அவரை கீழே இறக்கி பார்த்த போது அவர் மூர்ச்சையானது தெரிய வந்தது. உடனடியாக போலீஸ்காரர் சித்தார்த் தோமர் தனது மூச்சு மூலம் விஷாலின் உயிரைக் காப்பாற்ற சிபிஆர்( இதய நுரையீரல் மீட்பு) சிகிச்சையில் ஈடுபட்டார். சிறிது நேரத்திலேயே விஷாலுக்கு மூச்சு வந்துள்ளது.
இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். சரியான நேரத்தில் சிபிஆர் செய்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் விஷாலின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
தற்கொலை செய்ய முயன்ற தங்கள் மகனை உரிய நேரத்தில் சிபிஆர் செய்து காப்பாற்றிய போலீஸ்காரர் சித்தார்த் தோமருக்கு தௌலத்ராம் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷால் தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மூச்சை கொடுத்து இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.