நகைக்காக மூதாட்டியை கொலை செய்து அவரது உடலைக் குப்பைத் தொட்டியில் வீசிய தொழிலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்தவர் சாந்தா(61). இவர் கடந்த 18-ம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக குருப்பாம்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சாந்தாவை தேடி வந்தனர். இந்த நிலையில் சுடிதார் அணிந்து நகை அணிந்து சாந்தா நடந்து செல்லும் சிசிடிவி காட்சி சிக்கியது. இந்த வீடியோ காட்சியை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, உன்னுக்கல்லுவிலுள்ள ஒரு ஆள் இல்லாத வீட்டின் குப்பைத் தொட்டியில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று பார்த்த போது அது காணாமல் போன சாந்தா என்பது தெரிய வந்தது. குப்பைத் தொட்டியில் நிர்வாண நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகையையும் காணவில்லை. இதனால் நகைக்காக சாந்தாவை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சாந்தாவின் செல்போனை சோதனை செய்த போது அடிமாலியைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளியான ராஜேஷ்(41) என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. கடை நடத்தி வந்த ராஜேஷை போலீஸார் தேடிய போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு ராஜேஷை போலீஸார் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது நகைக்காக சாந்தாவை கொலை செய்ததை ராஜேஷ் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். சாந்தாவின் 12 பவுன் நகையை அடிமாலியில் தங்க நகை வேலை செய்யும் பிற மாநில தொழிலாளர்கள் மூலம் விற்று அதற்கு ஈடாக சில நகைகளையும், 4 லட்ச ரூபாயையும் ராஜேஷ் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.
சிசிடிவி காட்சி மூலம் அடையாளம் காணப்பட்ட சாந்தா வீட்டை விட்டு வெளியேறிய அன்றே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவரது உடலை சில நாட்கள் கழித்து குப்பைத் தொட்டியில் ராஜேஷ் வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜேஷிடம் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.