எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டை பழனிசாமியாக மாறிவிட்டார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடந்தது. இவ்விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதே போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடலூர் மாவட்டத்தில் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் மூலம் நகர்புறங்களில் உள்ள 64 பள்ளிகளில் 6,711 மாணவ மாணவிகள் பயன்படுகின்றனர். இது தேர்தல் அறிக்கையில் கூறப்படாத திட்டம். இது போன்ற பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துக்களை கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டை பழனிசாமியாக மாறிவிட்டார். கொரோனா காலத்தில் மக்களிடம் செல்லாதவர்கள் தற்போது பல்வேறு பெயர்களில் பயணங்கள் மேற்கொண்டு மக்களை ஏமாற்றுவதற்காக செல்கின்றனர்.
தடையில்லாமல் ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும் என்ற பொது விதி உள்ளது. பதினைந்து நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சென்றால் வழி விட வேண்டும் என்பது ஜனநாயக பண்பு. அதையும் மீறி தடுக்கிறார்கள். அதிகாரம் இல்லாத போதே இப்படி செய்கிறார்கள் என்றால் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வார்கள்? இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றார்.