கொள்ளையர்களால் இளம்பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக ஊர் நம்பிக் கொண்டிருக்க அந்த வீட்டுச் சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் பிரளயத்தை உண்டு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ரன்வீர் கிராமத்தில் இருந்து காவல் கட்டுப்பாடு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தங்கள் வீட்டிற்குள் புகுந்த திருடன் ஒரு பெண்ணைச் சுட்டுக் கொன்று விட்டு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாக அந்த அழைப்பில் இருந்து தகவல் வந்தது.
இதையடுத்து சிப்ராமௌ காவல் நிலைய போலீஸார், தகவல் வந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். வீட்டில் பெண்ணின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. பொருட்கள் சிதறிக் கிடந்தன. முதல் பார்வையில் இது கொள்ளையை ஒட்டிய சம்பவம் என்றே தெரிந்தது. உடனடியாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர் கிருஷ்ணகாந்தின் மனைவி நிக்கிதா என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, கொள்ளையர்கள் நிக்கிதாவை சுட்டுக் கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த 8 வயது சிறுமியிடம் போலீஸ்காரர் ஒருவர், என்ன நடந்தது பாப்பா எனக்கேட்டார்.
அந்த சிறுமி, எனது தந்தையும், மாமாவும் சேர்ந்து அத்தையை சுட்டுக் கொலை செய்து விட்டதாக கூறியதால் போலீஸ்காரர் அதிர்ச்சியடைந்தார். எந்த திருடனும் வீட்டுக்குள் வரவில்லை என்று அந்த சிறுமி மீண்டும் சொன்னார். இதையடுத்து கிருஷ்ணகாந்தை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சொத்துப் பிரச்னையில் நிக்கிதா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சொத்து பிரச்சினையில் நிக்கிதா தலையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிக்கியின் மைத்துனர் பிரவீன் கோபத்தில் துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்தார். திடீரென அவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின் மொத்த குடும்பம் அமர்ந்து பேசி, கொள்ளையர்களால் நிக்கிதா கொலை செய்யப்பட்டார் என போலீஸாரை நம்ப வைப்பது என முடிவெடுத்துள்ளனர். அதன்படியே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் போன் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பிரவீன், நிக்கிதாவின் கணவர் கிருஷ்ணகாந்தை போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கன்னோஜ் காவல்துறை கேப்டன் வினோத் குமார் கூறுகையில், அந்தப் பெண் திருட்டு காரணமாகக் கொலை செய்யப்படவில்லை, மாறாக குடும்பத் தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றார். 8 வயது சிறுமியின் சாட்சியத்தால் ஒரு அப்பாவி பெண் கொலை செய்யப்பட்டது வெளி உலகத்திற்கு வந்துள்ளது ரன்வீர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.