கேரளாவில் 9 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், காசர்கோட்டில் உள்ள ஹோஸ்துர்கில் கடந்த 2024 மே 15-ம் தேதி தனது தாத்தா வீட்டில் 9 வயது சிறுமி உறங்கிக் கொண்டிருந்தார். அவரை கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த சலீம்(40) என்பவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் சிறுமியின் நகைகளைத் திருடியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சலீமுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அவருக்கு ரூ.71,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியான தீர்ப்பின்படி, சலீமுக்கு இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 449-ன் கீழ் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரிவு 369-ன் கீழ் ஏழு ஆண்டுகள் மற்றும் ரூ. 5,000 அபராதமும், பிரிவு 370(4)-ன் கீழ் ஏழு ஆண்டுகள் மற்றும் ரூ. 5,000 அபராதமும், பிரிவு 506(2)-ன் கீழ் ஏழு ஆண்டுகள் மற்றும் ரூ. 5,000 அபராதமும், பிரிவு 342-ன் கீழ் ஒரு வருடம் மற்றும் ரூ. 1,000 அபராதமும், பிரிவு 394 இன் கீழ் பத்து ஆண்டுகள் மற்றும் ரூ. 25,000 அபராதமும் விதித்து விரைவு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 6(1) மற்றும் 5(மீ) ஆகியவற்றின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனை கூடுதலாக விதிக்கப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கண்ணூரில் உள்ள கூத்துபரம்பாவைச் சேர்ந்த சலீமின் சகோதரி சுஹைபா (21), பாதிக்கப்பட்டவரின் திருடப்பட்ட நகைகளை விற்க உதவியதற்காக நீதிமன்றத்தில் ஒருநாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிறப்பு அரசு வழக்கறிஞர் கங்காதரன் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் டார்ச் லைட்டில் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டது மற்றும் அவரது ஆடையிலிருந்து மீட்கப்பட்டு டிஎன்ஏ ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்€; தண்டனை வழங்கப்பட்டது. ஜனவரியில் தொடங்கிய விசாரணையில், 60 சாட்சிகள், 117 ஆவணங்கள் மற்றும் 17 பொருள்கள் விசாரிக்கப்பட்டன. சலீம் மற்றொரு போக்சோ சட்ட வழக்கையும் எதிர்கொள்கிறார், இது தற்போது அதே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது என்று கூறினார்.