ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை நீண்ட ஆராய்ச்சி செய்ய யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். திடீரென அவர் ராஜினாமா செய்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என்று இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ராஜினாமா கடிதத்தை தன்கர் வழங்கினார். ஆனாலும், இந்த ராஜினாமா அறிவிப்புக்கு பின்பு அரசியல் இருப்பதாகவும், தன்கர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். குறிப்பாக, அறையில் தன்கர் பூட்டப்பட்டிருக்கிறாரா என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்னை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விஷயம் குறித்து தேவையற்ற குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். ஜெகதீப் தன்கர் அரசியல் சாசன பதவி ஒன்றை வகித்தவர். அவர், தன்னுடைய பதவி காலத்தின்போது, அரசியல் சாசனத்தின்படி, சிறந்த முறையில் பணியாற்றியவர். அவருடைய உடல்நலப் பாதிப்புகளை முன்னிட்டு, பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்த விஷயத்தில் வேறு ஏதேனும் உண்டா என நீண்ட ஆராய்ச்சி செய்ய யாரும் முயற்சிக்க வேண்டாம் . இந்த ராஜினாமா பற்றி அவருடைய கடிதம் தெளிவான சுய விளக்கம் அளித்திருக்கிறது. உடல்நலனை கவனத்தில் கொண்டு அவர் பதவி விலகியுள்ளார். அவர் அமைச்சர்கள், பிரதமர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும், அவருடைய மனதில் இருந்து நன்றி தெரிவித்து இருக்கிறார் என்றார் அமித்ஷா.