ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டலால் ஆற்றுக்குள் வேன் பாய்ந்து ஒரு குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் ஆன்மிக சுற்றுலா நேற்று சென்றனர். வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று விட்டு அவர்கள் சென்ற வேன், ஜெய்ப்பூரை நோக்கி இரவு சென்று கொண்டிருந்தது.
அந்த வேனின் டிரைவைர், கூகுள் மேப் உதவியுடன் வேனை ஓட்டிச் சென்றுள்ளார். வேன் சொமி- உப்ரிடா பாலத்தில் சென்றுள்ளது. அந்தபாலம் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி காரணமாக மூடியிருந்தது. ஆனால், கூகுள் மேப்பில் பாலம் பயன்பாட்டில் இருப்பது போல காட்டப்பட்டிருந்ததால் டிரைவர் பாலத்தில் வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனால் வேன் பனாஸ் ஆற்றுக்குள் பாய்ந்தது. இதனால் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த போலீஸார், ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூகுள் மேப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.