தேசிய போட்டிக்கு தயாராகி வந்த நிலையில், துப்பாக்கி சுடும் வீரரான பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் மாவட்டம், புதூரில் உள்ள சம்பக்குளத்தில் வைரம் கார்டன்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தனியார் வங்கி அதிகாரி வடிவேல், வழக்கறிஞர் கிருத்திகா தம்பதியர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களது மூத்த மகன் யுவநவநீதன்(15) மேலூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
துப்பாக்கிச்சுடும் வீரரான யுவநீதன் மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களைப் பெற்றுள்ளார். மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ரைபிள் கிளப்பில் பயிற்சி பெற்று வந்தார். தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வான யுவநவநீதன், அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த வாரம் பயிற்சி முடித்த அவர், அதற்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியை வீட்டிற்கு பயிற்சிக்காக எடுத்து சென்றுள்ளார். கடந்த 12-ம் தேதி யுவநீதன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அதன்பின் பள்ளிக்கும், பயிற்சிக்கும் செல்லாமல் இருந்துள்ளார். அவரை பள்ளிக்குச் செல்லுமாறு பெற்றோர் அறிவுறுத்தி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
இதையடுத்து யுவநீதன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டை உள்ளே பூட்டி விட்டு இருந்துள்ளார். மாலையில் பணி முடிந்து வந்த வடிவேல், கதவை தட்டியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு யுவநீதன் தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த புதூர் போலீஸார் விரைந்து வந்து யுவநீதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேசிய போட்டிக்கு தயாராகி வந்த துப்பாக்கிச் சுடும் வீரர் ஏன் தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.