அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது டொனால்ட் டிரம்ப் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து உள்ளார். குறிப்பாக இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், அவசரகால அதிகாரங்களின் கீழ் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்து உள்ளது. வரி விதிப்புகளை அவர் நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் டிரம்ப் பயன்படுத்திய சட்டத்தைப் போல வரிகளை விதிக்க அதிபருக்கு சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் அங்கீகாரம் அளிக்கவில்லை. தனது அதிகாரத்தை மீறி டிரம்ப் நிர்வாகம் வரிகளை விதித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை முன்னிட்டு டிரம்ப் கூறுகையில், நாடுகள் மீது விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும் நடைமுறையில் இருக்கும். வரி விதிப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் பாரபட்சமானது, தவறானது, ஆனால், இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
மேலும், இந்த வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டிற்கு பெரும் பேரழிவாக இருக்கும். அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும். நாம் வலுவாக இருக்க வேண்டும். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து போராடுவேன் என்று கூறியுள்ளார்.