ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. உத்தராகண்ட், ஜம்மு- காஷ்மீரில் திடீரென ஏற்படும் மேகவெடிப்பால் கனமழை கொட்டி வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச், கிஷ்த்வார், ஜம்மு, ரம்பன் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் இன்றும், நாளையும் அதிக மழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை ரம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் தாலுகாவில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன. இதன் காரணமாக, து 11 பேர் உயிரிழந்தனர், மேலும் ஐந்து பேரை காணவில்லை என கூறப்படுகிறது.
அந்த பகுதியில் மீட்புக் குழுக்கள் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரியாசியின் மஹோர் பகுதியின் பத்ர் கிராமத்தில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மீட்பு நடவடிக்கை துரிதப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பல சேதங்களால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.