கிட்னி திருட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்திற்கு வந்தனர். இந்து கிட்னிகள் ஜாக்கிரமை என பேட்ஜ் அணிந்து வந்தனர்.
இதன்பின் கிட்னி திருட்டு தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதன் மீது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “கிட்னி முறைகேடு குறித்த தொலைக்காட்சி செய்தியை அறிந்து, முதல்வரின் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.
பள்ளிப்பாளையத்தில் உள்ள மருத்துவமனைகளில் அரசு குழு ஆய்வு செய்து, முறைகேடு நடந்ததை உறுதி செய்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.