என் பெயரையோ, கட்சியின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது என அன்புமணிக்கு டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் மருத்துவமனையில் இருந்த போது கட்சி, சாதி, மத, பேதமின்றி அனைவரும் என்னை நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்தார்கள். வர முடியாத ஒரு சிலர் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
நான் ஐசியூவில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன். ஒரு மணி நேரம் ஐயூசிவில் இருப்பார். அதன்பிறகு சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவார். நான் மருத்துவரிடம் பேசிவிட்டேன். இன்னும் இரண்டு நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக அன்புமணி கூறியுள்ளார். அவர் பேசிய பேச்சுகள், தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் உலுக்கி இருக்கும்.
ஜயாவிற்கு ஏதாவது ஆச்சினா நான் சும்மா இருக்க மாட்டேன். தொலைச்சி விடுவேன் என அன்புமணி பேசி இருக்கிறார். யார், யாரோ வந்து பார்த்துவிட்டு போய் கொண்டிருக்கிறார்கள். இது என்ன எக்சிபிஷனா என அன்புமணி பேசியிருக்கிறார்.படிக்காத மாடு மேய்ப்பவன் கூட இப்படி ஒரு சொல்லை சொல்லி இருக்க மாட்டான். அதற்காக தான் அவருக்கு தலைமை பண்பு இல்லை என கூறினேன்.
ஒரு தலைவர் என்று சொன்னால் யார் வேண்டும் என்றாலும் வரலாம். ஆறுதல் சொல்லலாம். எனக்கு எந்த தொற்று நோயும் இல்லை. நான் ஓடி, ஓடி உழைத்து வியர்வை சிந்தி இந்த கட்சியை வளர்த்தவன். நான் வளர்த்த கட்சியையும், கொடியையும் வைத்து கொண்டு நான் தான் கட்சி என சொல்லி கொள்வது எந்த நியாயமும் இல்லை. தேர்தல் ஆணையம் மூலம் நாங்கள் சந்திப்போம். பாமகவிற்கும், கொடிக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒழுங்கு நடவடிக்கை குழுவால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி என்னை பற்றி பேச கூடாது. வேண்டுமென்றால் நீ தனிக்கட்சி ஆரம்பித்து கொள் என்று ஏற்கெனவே நான் சொல்லி விட்டேன். என்னுடைய வளர்ப்பு சரியாக இருந்தது என நிருபிக்க வேண்டும் என்றால் நீ தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அது தான் உனக்கு நல்லது.இனிமேல் என் பெயரையோ, கட்சியின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது. என்னுடைய இனிஷியலை வேண்டும் என்றால் பயன்படுத்தி கொள்ளட்டும்." என்று கூறினார்.