தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 37,626 அரசு பள்ளிகள், 8,254 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11,890 தனியார் பள்ளிகள், 165 இதர பள்ளிகள் என மொத்தம் 57 ஆயிரத்து 935 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 1 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை விகித இலக்கை அடைய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய அளவில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரைஉ ள்ள தொடக்கப்பள்ளிகளில் 0.3 சதவீதமும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளில் 3.5 சதவீதமும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 11.5 சதவீதமும் இடைநிற்றல் அளவு இருந்து வருகிறது.
இந்த தகவலை கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ) வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலின்படி, தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் 2.7 சதவீதமாக இடைநிற்றல் உள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் 2.8 சதவீதமும், உயர்நிலைப்பள்ளியில் 8.5 சதவீதமும் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இடைநிற்றல் விகிதத்தில் தமிழ்நாடு ஓரளவுக்கு முன்னேற்றம் என்றாலும் 2023-24-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போது இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2023-24-ம் ஆண்டு மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியம் என்ற நிலையிலும், உயர்நிலைப்பள்ளிகளில் 7.7 சதவீதமாகவும் இருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு இடைநிற்றலே இல்லை என பள்ளிக்கல்வித் துறை கூறியது.
ஆனால் 2024-25-ம் ஆண்டு புள்ளி விவரத்தில் இடைநிற்றல் அதிகரித்துள்ளது என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.




