அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுகவில் கடந்த 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவர் செங்கோட்டையன். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள், விலக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார். இதனால் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் அவர் இணைந்து பேட்டி கொடுத்தார். இதன் காரணமாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த நிலையில், செங்கோட்டையன் நாளை(நவம்பர் 27) தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் வந்த கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். இந்த நிலையில், தலைமை செயலகத்தில் செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




