திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் நாளை (நவம்பர் 18) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோயிலில் உள்ள ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற டிக்கெட்டுகள் நாளை (நவம்பர் 18) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை நவம்பர் 20-ம் தேதி காலை 10 மணி வரை மின்னணு டிப் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யலாம். நவம்பர் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு முன் பணம் செலுத்தியவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை நவம்பர் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கான ஒதுக்கீடு 24-ம் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
பக்தர்கள் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




