ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் நடுரோட்டில் வைத்து குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்தவர் ஷாலினி(17). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று காலை அவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவி ஷாலினியை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் ஷாலினி உயிரிழந்தார்.
பட்டப்பகலில் நடந்த கொலையை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது, ஷாலினியை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பதும், அவர் ஒருதலையாய் ஷாலினியை காதலித்ததும் தெரிய வந்தது. காதலை ஏற்க மறுத்த ஷாலினியை அவர் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த முனியராஜை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




