வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்தது வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெருமழை கொட்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் அணைகள் நிரம்பி வழிகின்றன. வைகை அணையில் முழு கொள்ளளவை எட்டியதால் 5 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும்.
மேலும் வங்க கடலில் இன்று புயல் சின்னமான, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, அடுத்த 36 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு – மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ராமநாதபுரம் முதல் புதுச்சேரி வரையிலான கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கொட்டி வரும் மழை மேலும் வலுவடையும். அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




