Hot News :

உங்களுடன் ஸ்டாலின் நாடகம் யாருக்காக?- அண்ணாமலை கேள்வி

© News Today Tamil

மத்திய அரசு வழங்கும் கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதியும், எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "  ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் மலையில், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான இங்கு, குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய மலைக்கிராமங்களுக்கு, நேரடியாகச் செல்ல பாதை இல்லாததால், கர்நாடக, தமிழக வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள கர்கேகண்டி நீரோடை பள்ளம் வழியாக, 20 கிலோ மீட்டர் பயணித்தே இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியும்.

பல ஆண்டுகளாக, பொதுமக்கள் சிரமமின்றி கடந்து கிராம பகுதிக்குச் செல்ல, இந்தப் பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியும், தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளில், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என, ரூ.78,000 கோடி செலவிட்டுள்ளதாக, நிதிநிலை அறிக்கையில் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை.

மத்திய அரசு வழங்கும் கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதியும், எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது வெட்கக்கேடு. நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்?

ஒவ்வொரு மழைக்காலத்திலும், இது போன்ற கிராம மக்கள் அவதிப்படுவது முதல்வருக்கு தெரியாதா? சாலைகள் அமைத்தோம் என்று கணக்கு காட்டியிருக்கும் ரூ.78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், போர்க்கால அடிப்படையில், சாலை வசதிகளற்ற மலைக்கிராமங்களுக்கு, உடனடியாகச் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post ரூ.2,000 கோடி டெண்டர் விவகாரம்.- எஸ்.பி.வேலுமணி நிறுவனம் மீது வழக்கு
Next Post உங்களுடன் ஸ்டாலின் நாடகம் யாருக்காக?- அண்ணாமலை கேள்வி
Related Posts