ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்டு அமைப்பின் தலைவன் உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா, அவனது மனைவி ராஜக்கா உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட மத்வி ஹித்மாவை பிடித்துக் கொடுத்தால் 7 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




