பிஹாரில் இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு 122 தொகுதிகளில் நாளை( நவ.10) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிஹார் சட்டமன்றத்தில் கடந்த 6-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவற்றில் 121 தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பிஹாரில் தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவு 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, மீதமுள்ள 122 சட்டமன்ற தொகுதிகளில் நாளை (நவ.11) இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது.
மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கத்துடன் பாஜக கூட்டணி தலைவர்களும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் இந்தியா கூட்டணி தலைவர்களும் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிஹாரில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 122 தொகுதிகள் 20 மாவட்டங்களில் அடங்கி உள்ளன.
அங்கு மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 1,165 பேர் ஆண்கள், 136 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1 கோடியே 95 லட்சம்பேர் ஆண்கள், 1 கோடியே 74 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.
இதற்காக மொத்தம் 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து நவ.14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்று பிஹாரில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிய வந்து விடும்.




