ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் இடையோ போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆக.15-ம் தேதி அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது போர் நிறுத்தம் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் வாஷிங்டன்னில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து புதினை சந்தித்து பேச இருப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் இந்த சந்திப்பு நடைபெற இருந்தது.
இந்த நிலையில், புதின், டிரம்ப் இடையே நடைபெற இருந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டிரம்ப், புதின் சந்திப்பால் உக்ரைன் போர் குறித்து இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இரண்டு நாட்டு அதிபர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம் குறித்த முடிவு எடுக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.




