அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததை அறிவிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 25) கொடியேற்றம் ('துவஜாரோஹணம்) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராம ஜென்ம பூமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி 161 அடி உயர கொடிக்கம்பத்தில் காவிக் கொடியை ஏற்ற உள்ளார். துவஜாரோஹணம் சடங்கு என்பது ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முறையாக முழுமையடைந்துவிட்டதை குறிக்கும் அறிவிப்பாகும்.
இந்த சடங்கின் மூலம் கோயில் கட்டுமான தளத்தில் இருந்து, ராமரின் முழுமையான தெய்வீக இருப்பிடமாக மாறியது என பிரகடனப்படுத்துவதாகும். இந்தச் சடங்கிற்குப் பிறகு கோயிலின் 44 கதவுகளும் வழிபாடுகளுக்காகவும், சடங்குகளுக்காகவும் திறக்கப்படுகின்றன.
பிரதமர் மோடி ஏற்றவுள்ள 22 அடி நீளம், 11 அடி அகலம் கொண்ட காவிக் கொடியில், தங்க நூலால் கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மூன்று புனித சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. 11 கிலோ எடையுள்ள கொடி, குஜராத்தில் உள்ள ஒரு சிறப்பு பாராசூட் தயாரிப்பு நிறுவனத்தால், உறுதியான பாராசூட் தரத் துணியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அயோத்தி வருவதையொட்டி 6,970 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




