*மதுரையிலுள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை கே.கே நகர் பகுதியில் மத்திய அரசின் கீழ் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது.
மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் ஆதார் பிரச்சனை தொடர்பாக அப்டேட் பணிகள் செய்யப்பட்டு வருகிறது
தற்போது பள்ளிகளுக்கான தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஹால்டிக்கெட்டுக்கான ஆவண பணிகள் தொடங்கியுள்ளதால் மாணவ மாணவிகளுக்கான ஆதாரில் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்டவைகள் செய்வதற்கு தென்மாவட்டங்களில் போதிய அளவிற்கான ஆதார் மையம் இல்லாத நிலையில் மதுரைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
இன்று விடுமுறை நாளிலும் ஆதார் மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலாகவே ஆதார் சேவை மையத்தில் காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இது குறித்து பேசிய பொதுமக்கள் தங்கள் ஊர்களில் ஆதார் சேவை மையம் இல்லாத நிலையில் இது போன்று மதுரைக்கு சென்றால் மட்டும் தான் சரி செய்ய முடியும் என கூறுகிறார்கள்.
அதனால் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் எழுந்து ஆதார் மையத்திற்கு வந்திருக்கிறோம் . 9.30 மணிக்கு ஆதார் மையம் திறப்பார்கள். ஆனால் வேறு வழியில்லாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் திருத்த சேவைகளை ஈடுபட வேண்டியது உள்ளது என தெரிவித்தனர்.
மதுரையில் மத்திய அரசின் ஆதார் சேவை மையம் போல தென் மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறிய அளவிற்கான மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் எதிரில் இருக்கக்கூடிய ஆதார் மையத்தில் நாளொன்றுக்கு நூறு பேர் அமரும் அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தரக்கூடிய நிலையில் அதே பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு அங்குள்ள கடைகளில் முன்பாக வரிசையில் காத்திருப்பதால் கடைக்கு வரக்கூடியவர்களுக்கும் ஆதார் சேவை மையத்திற்காக காத்திருக்க கூடியவர்களுக்கும் இடையே அவ்வப்போது சிறிய சிறிய பிரச்சனை ஏற்பட்டுவருகிறது.
எனவே தமிழக அரசும் தனது இ சேவை மூலமாக வழங்கப்படும் ஆதார் சேவைகளை துரிதமாக வழங்குவதற்கான புதிய கணினிகளையும் புதிய அலுவலகங்களின் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் மாவட்ட அளவிலான ஆதார் சேவை மையங்களில் சிறிய சிறிய திருத்தங்களை கூட செய்யாமல் உடனடியாக மதுரைக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் கூறுவதால் ஒரு நாள் பணிகளை முழுவதுமாக ரத்து செய்துவிட்டு ஆதார் திருத்தத்திற்காக பொதுமக்கள் வருகை தரும் நிலை உள்ளது. இதனால் தங்களது ஒரு நாள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.




