கூட்டுறவு துறையில் நேர்முகத் தேர்வில் 10 முதல் 15 லட்சம் வரை வசூல் நடப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பல லட்சம் தமிழக இளைஞர்கள், அரசுப் பணிக்காக பல ஆண்டுகள் தங்களை அர்ப்பணித்து, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க, திமுக அமைச்சர்கள், அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, அமைச்சர் கே.என். நேரு துறையில் பணி நியமனத்திற்கு பணம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில், நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தனர். முன்னாள் சாராய அமைச்சர், இது போன்று, அரசுப் பணி நியமனத்துக்கு பணம் வாங்கியதால்தான், ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பதையும், அமைச்சர் பதவியை இழந்தார் என்பதையும், திமுக அமைச்சர்கள் மறந்து விட்டார்களா அல்லது, வந்த வரை லாபம் என்று வாரிச் சுருட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின், தனது அமைச்சர்கள், அரசுப் பணி நியமனத்துக்காக பணம் வசூலிப்பது தெரியாத அளவுக்குப் பொறுப்பற்ற முதலமைச்சராக இருக்கிறாரா அல்லது அவருக்குத் தெரிந்தேதான் இவை எல்லாம் நடைபெறுகின்றனவா? நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், நேர்மையான, திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திமுக அமைச்சர் பெரியகருப்பன், தனது பொறுப்பை உணர்ந்து நேர்முகத்தேர்வு நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.




