போபாலில் எம்எல்ஏ மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பிரேம் நாராயண் பகதூர். இவரது மகள் மோனிகா சௌபால்(29). இவர் போபாலில் உள்ள ஷாபுரா பகுதியில் வசித்து வந்தார். அத்துடன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், திரிலங்கா காலனியில் உள்ள நடைபாதையில் உள்ள மரத்தில் மோனிகா தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் விரைந்து வந்து மோனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.எதற்காக அவர் தற்கொலை செய்தார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர். மேலும் மோனிகா வசித்த வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது.
அதில், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது குடும்பத்தினரை எந்த வகையிலும் போலீஸார் துன்புறுத்த வேண்டாம் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. மோனிகாவிற்கு திருமணம் ஆகாத அக்கா ஒருவரும், ஒரு தம்பியும் உள்ளனர்.
அவர்களிடம் மோனிகா தற்கொலை குறித்து ஷாஹ்புரா காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். மோனிகா அமைதியாக வாழ்ந்து வந்ததாகவும், வேறு எந்த தகராறுகளோ, பிரச்சனைகளோ இல்லை என்றனர். பிறகு எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




