தென்காசியில் தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24) இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தென்காசியில் இருந்து ஸ்ரீவல்லிபுத்தூர் சென்ற பஸ்சும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பஸ்சும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




