பிஹாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ள மனாஸ் கிராமத்தில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். உறக்கத்திலேயே இவர்கள் 5 பேரும் உயிரிழந்ததாக அருகே வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டனர். பின்னர் அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சரண் காவல்துறை கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் இன்று தெரிவித்தார். பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இடிந்து விழுந்த வீடு 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வீடு என்றும், அதன் நிலை மோசமாக இருந்ததாகவும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறினர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




