இந்தியாவுக்கு 822 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியா, அமெரிக்காவிற்கு இடையே இருந்த கசப்பு மெல்ல, மெல்ல மறந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய ராணுவத்திற்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்ஜிஎம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள், 216 எக்ஸ்கலிபர் பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவம் பெற உள்ளது. இந்தியா கொள்முதல் செய்யும் எப்ஜிஎம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பயன்படுத்தி வருகிறது. இது ராணுவ வீரர்களின் தோள் மீது வைத்து ஏவப்படும் என்பதால், டேங்கர் போன்ற இலக்குகளை நீண்ட தூரத்திலிருந்து அதிக துல்லியத்துடன் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் டிஎஸ்சிஏ எனப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; ராணுவ உபகரணங்களுடன் பாதுகாப்பு சோதனைகள், ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி, ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுபித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் இந்திய கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆயுத விற்பனை மூலம், அமெரிக்கா - இந்தியா இடையிலான ராஜதந்திர உறவுகள் வலுப்படுத்தப்படும். அத்துடன் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவின் திறன் மேம்படுத்தப்படும். இதன்மூலம், பிராந்திய அச்சுறுத்தல்களைத் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




